24.11.25

வெண்முரசு வாசிப்பனுபவங்கள்- மழைப்பாடல்

கிடைத்தற்கரிய ஒரு பேரனுபவம் மழைப்பாடல் வாசிப்பு.வாசிப்பனுபவத்தை மொத்தமாக தொகுத்துக் கொள்ள முனைகையில் எண்ணற்ற நிலங்களும்,மனிதர்களும், குணங்களும்,சம்பவங்களும் காட்சிகளாக அகத்தில் விரிந்துகிடக்கின்றன. பலமும் பலவீனமும் ஒருங்கே கொண்ட இந்த மானுடப்பிறப்பின் மேன்மைகளை கீழ்மைகளை ஆடியில் ஒருசேர பார்த்தது போன்றதொரு உணர்வு மழைப்பாடல்.முதற்கனலைப் போலவே மழைப்பாடலிலும் பீஷ்மரின் தன்னறமான குணமே முதன்மையாய் மனதில் பதிந்தது. மனதிற்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்த ஒரு காட்சி உண்டு. திருதராஷ்டினன் தன் சிறுமையால் பீஷ்மரை துவந்த யுத்தத்திற்கு அழைத்து தோற்று,பின்பு பீஷ்மரை சந்திக்க வந்தபோது பீஷ்மர் திருதராஷ்ட்டினை அன்புடன் ஆரத்தழுவி தனுர்வேதத்தை கற்றுக்கொடுக்கும் முன் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் மந்திரம் போலானது. 'இந்த குருகுலத்தில் நியதிகளில் ஒன்று.ஒருமுறைக்கு மேல் எதுவுமே சொல்லப்படாதது என்பதுதான்.அது உனக்கும் விதி. நீ கற்றமுறையில் இங்கே கல்வி இருக்காது.அனைத்தும் செயலாக நிகழ வேண்டும்.' என்ற பீஷ்மரின் சொற்களை உணர்ந்த போது இப்பிரபஞ்சம் படைக்கப்பட்ட போது உருவாக்கப்பட்ட நியதியே இதுவாகத்தான் இருக்குமோ ? ஒரவளவுக்கு பிற உயிர்கள் அதனை பின்பற்றவே செய்கின்றன. இந்த மனிதப் பிறவியொன்று தான் அதை மறந்து சௌகர்யங்களை தனக்கேற்றார் போல் மாற்றியமைத்துக் கொண்டு தன்போக்கில் வாழ நியதிகளை சமைத்துக் கொண்டனவோ என்று தோன்றியது. முற்றிலுமாகக் கீழ்மைகளை மட்டுமே, பலவீனங்களை மட்டுமே கொண்ட ஒரு மானுடப் பிறப்பென்று இப்புவியில் எவருமே இருக்க முடியாது என்று மழைப்பாடலை வாசித்த போது நினைத்துக் கொண்டேன்.விழியற்றவனாக திருதராஷ்டினன் இருக்கிறான்.அதன் விளைவான ஒரு ஆற்றாமையும்,பாதுகாப்பின்மையும் கொண்டவனாக அவனை ஆக்குகிறது. ஆனால், திருதராஷ்டினனைப் போல் இசையை அனுபவித்து ரசித்து உணர்ந்தவர் வேறு எவர் இருக்க முடியும்? கேட்கிற இசையை விட உணர்கிற இசை கூடுதல் இசைமையுடையது. திருதராஷ்டினன் வெறும் இசை கேட்பவனல்ல.இசை உணர்பவன். பீஷ்மர் திருதராஷ்டானனிடம் இப்படி சொல்வார்.'காற்றை உணர்ந்தால் நீ அனைத்து பொருட்களையும் உணர முடியும்.கண்ணைவிட விரைவிலேயே நீ உடலால் அனைத்தையும் அறிய முடியும்' என்று.புறஉலகச் சிதறலின்றி,புலன் தாண்டி மெய்வழியாய் பூரணத்துடன் உணர்ந்து வாழ்வதென்பது ஒருவகையில் எத்தனை முழுமையான வாழ்வாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டேன்.அந்தத் தொடுகையொன்றே அம்பிகையிடம்,விதுரனிடம்,காந்தாரியிடம் அவரவரின் திருதிராஷ்டிரனை அவர்களிடம் கொண்டு சேர்த்தது.தன் உடற்குறையால் உருவாகிய ஒருவிதமான பாதுகாப்பின்மையை அரியணையில் அமர்வதன் மூலம் நிறைவேற்றிக்கொள்ள அத்தனை தீர்க்கமாய் நீண்டகாலம் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த திருதராஷ்டினன் விழியில்லாததால் தான் அரியணையில் அமர முடியாது என்ற சூழ்நிலை வந்த கணத்தில் விதுரன் பாண்டுவை திருதராஷ்டினனிடம் ஆசி பெற்றுக்கொள்ள அழைத்தபோது ஒருநொடி கூட யோசிக்காமல் சிறிதுகாலம் நீயே அரியணை ஆழ்வாய் என்று தன் தம்பி பாண்டுவிற்கு ஆசியளித்து மனசார விட்டுக்கொடுக்கிறான். பாண்டுவிற்கும் ஒரு உடற்குறை இருந்தது .உடல் வெம்மை கொண்டு ஒருவிதமான நரம்புத் தளர்ச்சி நோயால் வாழ்வு முழுதும் அவதிப்படுகிறான்.பாவைகளை வைத்து விளையாடும் சிறுபிள்ளையின் சித்தரத்திலேயே பாண்டு அனைவராலும் பார்க்கப்படுகிறான்.ஆனால் அதே குணம் தான் குந்தியின் சுயம்வர நிகழ்ச்சியில் பாண்டுவிற்கு பலமாகவே அமைந்தது.கம்சன் போன்றோர் உடல் வலிமை கொண்ட போட்டிகளில் பங்கெடுத்து வெற்றிகொள்ள , பாண்டு புலியையும் பூனையையும் கூண்டில் அடைக்கும் அறிவுக்கூர்மை சார்ந்த சவாலான போட்டியில் தான் பாவைகளுடன் விளையாடும் அதே யுக்தியை பயன்படுத்தியே குந்தியை சுயம்வரத்தில் வென்று மணம் முடிக்கிறான். சகுனியைப் பற்றி சத்யவதி சியாமையுடன் ஆலோசிக்கும் போது சொன்ன சொற்களை வாசித்தபோது எத்தனை உண்மை என்று தோன்றியது ."ஒருவனைப் பற்றி எந்த இறுதி முடிவையும் எடுப்பதற்கு முன் அவனை நேரில் பார்த்தாக வேண்டும்.அவனிடம் சில முறையாவது பேசியாக வேண்டும்.எத்தனை நுணுகியறிந்திருந்தாலும் நேரில் பார்க்கையில் நம் அனைத்துக் கணிப்புகளும் பிழைபட்டு விடுகின்றன.பிறர் சொல்லும்போது நம் சிந்தைதான் அவற்றைக் கேட்கிறது.நம் தர்க்கம் தான் அவற்றை புரிந்து கொள்கிறது.அம்மனிதன் நம்மருகே நிற்கையில் நம்முடைய ஆன்மா அவனை உணர்கிறது.உள்ளுணர்வின் மூன்றாம் விழியால் அவனை நாம் பார்க்க முடிகிறது." ஆம்! இப்படித்தானே இருக்க முடியும் ? சகுனியை சினந்து வெறுக்கும் இடமென்று மழைப்பாடலில் ஏதுமில்லை. காந்தார பாலை நிலத்தில் நடுநிசியில் ஓர் ஓநாயின் பசியையும் அதன் போக்கையும் ஆராய்ந்து அதனை பின்தொடர்ந்த சகுனியின் கூர்ந்த அவதானிப்புகள் வியக்கச் செய்தது.அந்த மதியூகம் தானே சகுனியின் ஆளுமை.திருதராஷ்டிரன் முடிசூடி தன் தமக்கையான காந்தாரி அரியணையில் அமர்வதைக் காண்பதற்காகவே காந்தாரத்தை விட்டு வந்த சகுனி ஒரு நிலையில் திருதராஷ்டிரன் மூடிசூடப் போவதில்லை என்பதை அறிந்ததும் எழுந்த ஆற்றாமையை முற்றிலுமாக அடக்கிக்கொண்டு பீஷ்மரின் அன்பிற்கும் வார்த்தைக்கும் கட்டுப்பட்டு ஒரு கைக்குழந்தைபோல் அவரிடம் சரண்புகுந்த அந்த சகுனியை நினைக்கையில் வியப்பே எழுந்தது.சகுனியையும் தன் தூய அன்பில் கட்டிப்போட்ட பீஷ்மரின் உயரத்தை நினைத்துக் கொண்டேன். காந்தாரியை அறிந்து, அவளது மாறும் நிலைப்பாட்டை உணர்கையில் எனக்கு கி ராவின் கன்னிமை சிறுகதை நினைவிற்கு வந்தது.'நம்மை பிறர் சினம் கொள்ள செய்யமுடியுமென்பதே ஓர் இழிவல்லவா?' என்று இத்தனை பக்குவமானவளாக இருக்கும் காந்தாரி மணம்முடிந்த பின் அரியணை ஆசை, தன் மைந்தனுக்கான ஆட்சி என்று போட்டி பொறாமைகளில் கலங்கடிக்கப்படுகிறாள்.அந்த கன்னிமை பருவத்தில் இருக்கும் ஒரு தூய குணம் பின்பு மறைந்துதான் போகின்றதோ என்று காந்தாரியை உணர்கையில் எண்ணத் தோன்றியது."கொள்கைகைகளை விட, கனவுகளை விட கையில் இருக்கும் குழந்தை என்னும் மெய் பெரிதென்று இவர்கள் நினைக்கிறார்கள்" என்று பீஷ்மர் சொன்ன வார்த்தைகள் சத்யவதியிலிருந்து அம்பிகை, அம்பாலிகை, காந்தாரி, குந்தி உட்பட யாவருக்கும் பொருந்தும் தானே.அந்த பிள்ளை பாசமென்ற பெரும் திரை ஒன்று மட்டுமே அத்தனை ஆண்டுகளாய் அம்பிகையையும் அம்பாலிகையையும் விலக்கி வைத்திருந்தது.பாண்டுவின் இறப்பைக் கேட்ட அந்த நொடி அத்திரை அறுபட்டு பழைய அம்பிகையையும் அம்பாலிகையையும் அவர்களுக்கு திருப்பிக் கொடுத்தது.இந்த மனித மனம் தான் எத்தனை விசித்திரமானது.அன்பு, வெறுப்பு எதிலும் நிலைப்பட ஒன்றில் அதனால் இருக்கமுடிவதில்லை. அம்பிகை,அம்பாலிகை இருவரும் வனம்புக எத்தனிக்கையில் அவர்களோடு சத்யவதியும் வனம் செல்ல எடுத்த முடிவு மனதை கலக்கவைத்தது.கண்கலங்காமல் அந்த கடைசி அத்தியாயத்தை வாசிக்க முடியவில்லை.அதுவரை அவள் எத்தனை பொறுப்புகளை,பாரங்களை சுமந்திருப்பாள்.அவள் எடுத்து வைத்து ஒவ்வொரு சிறு அடியிலும் தான் எத்தனை போராட்டங்கள்.அதுநாள் வரை ஆன்மபலத்தோடு எதிர்கொண்டிருந்தவள் சட்டென்று அத்தனையிலிருந்தும் அறுபட்டு ஒரு பெரும் விடுதலையுணர்வைக் கோரும் முடிவை ஒரு நொடியில் எடுக்க முடிந்துவிடுகிறது.அதற்கு முன் தன் மகன்கள் சித்ராங்கனின், விசித்திரவீரியனின் மரணத்தை அருகில் இருந்து பார்த்து, கடந்து வந்தவளுக்கு பாண்டுவின் மரணச்செய்தி அவளை அப்படியொரு முடிவை எடுக்க செய்ய முடிந்திருக்குமா என்று தோன்றவில்லை. அவள் அத்தனை நாள் இறைஞ்சிக் காத்திருந்த துறவிற்கு ஒரு துயர் வழிகாட்டியிருக்கக்கூடும். மானுடத்துயர் அதன் உச்ச குரூரத்துடன் வந்து நிற்கையில் ,அது அந்த அகவிடுதலையைக் கோரும் துணிவை கொடுக்கும் போலும். மழைப்பாடலின் பாதி அத்தியாயத்திற்கு மேல் குந்தியே என்னை முற்றிலுமாக ஆட்கொண்டாள்.பாண்டு இறந்த சமயம் அவள் எண்ணஓட்டத்தில் எழுந்த சிந்தனை, " அவள் கால்கள் சற்று பதறுமென்றால் ,உள்ளம் சற்று சோர்வுறுமென்றால், அவள் மைந்தர்கள் மண்ணும் மதிப்பும் இல்லாத சேவகர்களின் வாழ்க்கைக்கு சென்றுசேருவார்கள்". இளவயதில் கணவனை இழந்து பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் அத்தனை பெண்களிலும் இதே வைராக்கியமும் தீர்க்கமும் தானே இருந்திருக்கும். அவர்கள் அத்தனை பேரும் குந்தியானவர்கள் தானே. எண்ணற்ற சிந்தனைத்தளங்களும் ,வாசிப்பின்போது தானே மனதில் பிடித்து தங்கிவிடும் உவமைகளும் மழைப்பாடலின் வழிநெடுக நிறைந்திருந்தன.'அவன் சொற்களெல்லாம் முளைக்கும் ஒரு வயல் நீ ' என்று சத்யவதி விதுரனிடன் சொன்ன உவமையை முகமலர்ந்து ரசித்தேன்.சார்வாகன் உதிர்த்த சொற்கள் ஒவ்வொன்றிற்குள்ளும் உறைந்திருந்திருந்த உண்மையை அறிய முயன்றேன் ."உண்மை என்பது என்ன? எப்போதும் அது இருந்து கொண்டிருப்பது.அது பொய்யால் மறைக்கப்பட்டிருக்கிறது.அந்தப் பொய்யை உருவாக்குவது எது?எது இந்த நகரை, இந்த அரசை, இந்த வாழ்க்கையை இந்த தெய்வங்களை உருவாக்கியதோ அது அதான். மானுடன் தன்னந்தனியானவன்.ஒவ்வொரு நாளும் பேரியற்கை முன் தன்னந்தனியாக நிற்க கடமைப்பட்டவன்.அந்தத் தனிமையை அவன் அஞ்சத் தொடங்கிய போது தான் இவையனைத்தும் உருவாயின" இப்படி சார்வாகனின் வரிகள் வழியாய், பிரபஞ்சத்திற்கும் இந்த இருப்பிற்குமான தொடர்பை, தேடல்களையெல்லாம் ஆழ்ந்து சிந்திக்கும் தருணங்கள் வெண்முரசின் வாசிப்பின்போது நிகழ்வதை உணர்கிறேன். கீழ்மைகளும் குறைகளும் மட்டுமே முழுமையாய் நிறைந்தவொன்றென்று இப்புடவியில் எவ்வுயிரும் இல்லையென்பதைப் போலவே ,ஒவ்வொரு பிறப்பிற்குமே அதன் இருப்பிற்கான ஒரு அர்த்தமும், இப்பிரபஞ்சவியக்கம் என்னும் தொடர்ச்சங்கிலியில் அதுவும் ஒரு கண்ணியாக என்றுமே இணைந்திருக்கும் என்ற சிந்தனையே மழைப்பாடலை வாசித்து முடித்த கணம் மனதில் நின்றது. சிவை நினைவிற்கு வருகிறாள்.அவள் நிகழ்த்தவேண்டியவற்றை நிகழ்த்தியபின்னர் தானே அவளும் விடைபெற்றாள்.அவள் வாழ்வும் அர்த்தப்பட்டதுதானே . "பிறப்பும் இறப்பும் கூடியும் பின்னும் வலையால் ஆனது இப்புடவி என்பதால் ஒவ்வொரு பிறப்பும் இங்கு நிகழ்த்தும் அனைத்துடனும் இணைந்துள்ளது" என்ற மழைப்பாடலின் வரிகளை நினைத்துக் கொள்கிறேன்.வண்ணக்கடலை தொடங்விருக்கிறேன்.
வெண்முரசு வாசிப்பனுபங்கள் 1.முதற்கனல் : இந்த ஆண்டு ஜூன் மாதம் உங்கள் கொற்றவை நாவலை வாசித்து முடித்தேன். அந்த வாசிப்பின் எழுச்சியில் நேரடியாக வெண்முரசுக்குள் நுழைந்தேன். முதற்கனலை வாசிக்க ஆரம்பித்தேன். முதற்கனலின் முதல் ஐந்து அத்தியாயங்களைக் கடந்து வேள்விமுகம் தாண்டிய போது வெண்முரசின் மொழியும் , வர்ணனைகளும்,உவமைகளும் ஈர்த்துக்கொண்டு முதற்கனலின் உலகத்தில் முழுவதுமாக பிரவேசிக்க வைத்தது. நிலம் பற்றிய வர்ணனைகளும்,தட்சன் தாட்சாயிணி,சிபிச் சக்கரவர்த்தி போன்ற கிளைக்கதைகளும்,ஷத்ரிய அறம் பற்றிய விளக்கங்களும் வாசிக்க வாசிக்க பருப்பொருளிலிருந்து உருவான இப்புடவியின் ஒவ்வொரு நிலமும் காலத்தின் போக்கில் அதற்கான வலுவான வரலாற்றையும் பண்பாட்டையும் அடைந்தவிதத்தை சிந்தித்துப் பார்க்கையில் ஒரு பிரமிப்பும் வியப்பும் எழுந்தது. இதற்கு முன் முக்கண்முதல்வனிலிருந்து தொடங்கும் கொற்றவையை வாசித்த போது அப்படி ஒரு உளஎழுச்சியை அடைந்தேன். முதற்கனலின் வாசிப்பில் அந்த உணர்வின் ஆழம் இன்னும் பன்மடங்காகியதை உணர முடிந்தது. முதற்கனலின் முதல்வாசிப்பில் சத்யவதி ,விசித்திரவீரியன் ,பீஷ்மர் ,அம்பை, சிகண்டியே உச்சமாக பதிந்தார்கள்.சந்தனுவிற்கு,சத்யவதிக்கு,அஸ்தினாபுரத்திற்கென்று தன் சுயவிருப்பு வெறுப்புகளைத் துறந்த பீஷ்மரின் தியாகமே பீஷ்மரைப் பற்றிய முதல் நினைவாய் மனதில் பதிந்தது. சத்யவதி காசி மன்னனின் இளவரசிகளை கவர்ந்து வர சொல்லி பீஷ்மருக்கு கட்டளையிட்டபோது உள்ளம் கலங்கி கிருஷ்ண துவைபான வியாசரின் பீஷ்மர் ஆலோசனை கேட்கச்சென்றபோது, சால்வனை உதறி காசி சென்று திரும்பிய அம்பை பீஷ்மரிடம் அன்பைக்கோரி மன்றாடியபோது,அஸ்தினாபுரியை நீங்கிச் சென்ற பீஷ்மர் இரவில் கல்மண்டபத்தில் தங்கியபொழுது சூதர்கள் பாடல்கள் வழியாக எள்ளிநகையாடியதைக் கேட்டபோது,'இந்த பாரதவர்ஷத்தில் எங்காவது நான் ஒரு குடும்பம் அமைத்து வாழவிரும்புவேன் என்றால் அது இங்குதான். ஆனால் இப்பிறவியில் எனக்கு அந்த நன்னிலை இல்லை' என்று அந்தக் கிராமத்து முதியவரிடம் பீஷ்மர் சொன்ன போது, “பெண்ணின் அன்பைப்பெறாதவன் பிரம்மஞானத்தால் மட்டுமே அந்த இடத்தை நிறைத்துக்கொள்ளமுடியும். நான் இரண்டுக்கும் தகுதியற்றவன். பழிசூழ்ந்தவன்” என்று தன்னை மணக்க விரும்பிய கிராமத்து இளையபெண்ணிடம் பீஷ்மர் கூறிய போது, நாக முனிவரின் ஆடியில் யயாதியாய் பீஷ்மர் தன்னைக் கண்டபோதும், இந்த எல்லா சூழ்நிலைகளிலும் அத்தனை இறுக்கங்களிலிருந்தும் அறுபட்டு ஒரு பெரும் விடுதலைதலையுணர்வை இறைஞ்சும் பீஷ்மரையே உணர முடிந்தது . 'நான் என்னை உருவாக்கிக் கொள்ள வாய்ப்பே அளிப்பதில்லை.என் வழியாக உருவாகும் என்னை நானே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கேன்' என்ற பீஷ்மரின் வார்த்தைகளில் அடிமனக் கலக்கமும், வலியும் தோய்ந்த உண்மையாகவே அது வெளிப்பட்டது. முதற்கனலின் வழி நெடுகவே உறவுமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையில் ஒருவர் பிறிதொருவரை நிறைக்கும் முழுமையை ,கூரிய அவதானிப்புகளை விளக்கும் நிகழ்வுகளும் ,வரிகளும் ஏராளம். "உங்கள் விழிகள். அவற்றில் ஆணே இல்லை.ஆண்களின் கண்களில் உள்ளவை இருவகை உணர்வுகள். ஒன்று, வேட்கை. எப்போதும் எரியும் அதன் சுவாலை விலகினால் தெரிவது புறக்கணிப்பின் ஏளனம்…அதையே ஆண்மை என்கிறார்கள். அவை உங்கள் கண்களில் இல்லை. இவை என் அன்னையின் கண்கள் போலிருக்கின்றன,” என்று அம்பிகை விசித்திரவீரியனிடம் மஞ்சத்தில் சொன்ன வார்த்தைகள், "எனக்கு சற்று குற்றவுணர்வு இருந்தது. ஆனால் அந்த காசிநாட்டு இளவரசி அழுததைப் பார்த்தேன். அக்கணமே நெஞ்சு திறந்து இறந்துவிடுபவள் போல…அப்போது என் மனம் நிறைந்தது. ஒரு பெண்ணின் மனதை நிறைத்துவிட்டுச் செல்வதுதான் ஆண்மகன் ஒருவன் மண்ணில் வாழ்ந்தமைக்கான அடையாளம்…' என்று அம்பிகையையும் விசித்திரவீரியனையும் பற்றி சத்யவதி பீஷ்மரிடம் சொன்னது, "ஒரு பெண்ணை யாரோ ஓர் ஆண் மட்டும்தான் முழுப்பெண்ணாக்குகிறான் என்று தெரியுமா உனக்கு? அப்படிப்பட்ட ஆணை சந்திப்பவளே நல்லூழ்கொண்டவள்….ஆனால் ஒன்று சொல்கிறேன். அந்த ஆணை தன் மகனாகக் கொண்டவள் பெரும்பேறு பெற்றவள். அவள் நான்,” என்று சத்தியவதி உதிர்த்த வார்த்தைகள் யாவும் அதற்கான சாட்சிகள். ஆண் பெண் உறவில் ஒருவர் பிறிதொருவரை நிறைக்கும் இடம் போல், ஆணவத்தால் ஒருவர் பிறிதொருவரை பிரியும் பிளவும் இப்பிரபஞ்ச ஆட்டத்தின் ஆண் பெண் விளையாட்டின் ஒரு அங்கம் போல. தாட்சாயிணியால் தோல்வியுற்ற தட்சன் 'களத்தில் நான் தோற்கவில்லை, உன் மேல் கொண்ட அன்பினால் தோற்றேன்' என்ற சொன்னபோது ஒரு ஆணின் வலிமை பெண்ணின் அன்பின் முன்னால் தோற்றதை உணரும்போது அது அடக்கமுடியா ஆணவமாக வெளிப்பட்டுவிடுகிறது. அப்படி அம்பை மன்றாடி தன் தூய்மையான அன்பை வெளிப்படுத்தி அதை ஏற்குமாறு பீஷ்மரிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தபோது ஒரு பெண்ணின் அன்பின் முன்னால் நாம் படிப்படியாக தோற்றுக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே பீஷ்மரிடம் ஏளன சுழிப்பாக வெளிப்பட்டிருக்கக்கூடும். அதை கண்டுகொண்ட அம்பாயாகிய திருமகள் அக்கணத்திலிருந்து எரிக்கும் கொற்றவையானாள். முதற்கனலின் அம்பை கொற்றவையின் கண்ணகியை நினைப்படுத்தினாள். தான் நேசிக்கும் ஆணின் மீது அப்பழுக்கற்ற அன்பை சுமந்திருக்கும் போது அவள் கனிந்து நிறைந்திருக்கும் திருமகளாகவே இருக்கிறாள். கோவலன் மாதவியிடம் சென்ற போதும் கோவலன் கண்ணகி மீது கொண்ட அன்பிற்காக அல்ல , கண்ணகி கோவலன் மீது கொண்ட தூய்மையான அன்பிற்காகவே அவள் காத்திருந்திருக்கக்கூடும். அந்த அன்பின் சாட்சியான கணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது அவள் கொற்றவையாகி மதுரையை எரித்து , முலையறுத்து நோன்பு பூண்டு பின் சமாதி நிலையடைந்தாள். இங்கு அம்பைக்கு எல்லா நிலையிலும் யாவரும் அநீதியே இழைத்தார்கள். நினைத்த சுயம்வரம் நடக்காமல், நேசித்த மணவாளன் கிடைக்காமல், நேசித்த சால்வனை அடைக்கலம் தேடி சென்ற போது அவனும் கீழ்மையான சொற்களால் அம்பையை நிராகரித்து, இறுதித் தஞ்சம் என்று நினைத்துச் சென்ற பிறந்தவீடான காசிநாடாலும் கைவிடப்பட்டு, பின் கடைசியில் ஒற்றை சரணாகதியாய் பீஷ்மரிடம் அன்பைக்கோரி மண்டியிட்டபோது பீஷ்மர் அவள் தன்மானத்தை சீண்டி அவர் மீது கொண்ட அன்பில் பிழை கண்டபோது இந்தத் திருமகளும் கொற்றவையாகி இறுதியில் நெருப்புக்கு அவியானாள். பீஷ்மர் அம்பை இவ்விருவரையும் நினைக்கையில் இந்த இருவர்மீதுமே கருணை தோன்றியதே தவிர குறைபட முடியவில்லை. இருவருமே அவரவர் சூழ்நிலையில் அவரவர் சரியே என்றாலும் 'பாசிமணிகளுக்குள் பட்டுச்சரடுபோல மனிதர்களுக்குள் விதியின் நோக்கம் ஊடுருவிச் செல்கிறது ' என்ற முதற்கனலின் வரிகளே அம்பை பீஷ்மர் பகுதியை வாசித்தபோது அப்போது நினைத்துக்கொண்டேன். ஆடியின் ஆழத்தில் அக்னிவேசர் மற்ற சிஷ்யர்களிடம், துரோணரிடம் ,சிகண்டியிடம் சொல்லும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மந்திரமாக பதிந்தது.முதற்கனல் வாசிப்பின் போது கூடவே ஒரு கல்வி நிகழ்வதையும் உணர முடிந்தது. எண்ணற்ற வாக்கியங்களும் உவமைகளும் அகத்தில் அமர்ந்து நிறைந்திருக்கின்றன. 'எந்த சொற்களையும் விட உடல் ஆன்மாவை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.' 'விழியற்றவனுக்கு கண்களில் நிறங்கள் இல்லை. விழியிருப்பவனுக்கு உடலில் நிறங்கள் இல்லை '. 'கரைகளால் நதி கட்டுப்படுத்தப்படுவதில்லை. கரைகளை நதிகளே உருவாக்கிக்கொள்கின்றன '. 'ஞானம் என்பது அடைவதல்ல. ஒவ்வொன்றாய் இழந்தபின் எஞ்சுவது '. இப்படி உள்ளுக்குள் உணர்ந்து வியந்த வரிகள் இன்னும் எத்தனையோ. முதல் வாசிப்பில் நிச்சியமாக பல விஷயங்களை தவற விட்டிருப்பேன் என்பதையும் உணர முடிந்தது. மீண்டும் மீண்டுமான மீள்வாசிப்புகளில் அக்குறையை நிறைத்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணியிருக்கிறேன். வெண்முரசு தொடர் ஒரு கிளாசிக் என்று ஏன் சொல்லப்படுகிறது என்று இப்போது புரிகிறது. எவ்வளவு முறை படித்தாலும் தீராமல் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒன்று கிளாசிக். கொற்றவையும் முதற்கனலையும் இவ்வாண்டு வாசித்ததில் ஒரு கிளாசிக்கை படிப்பதே எனக்கு உகந்த வாசிப்பு என்று கண்டுகொண்டேன். மழைப்பாடலை தொடங்கியிருக்கிறேன்.